பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்..

 


கடந்த 2020ஆம் ஆண்டு, அக்டோபர் 5ஆம் தேதி, பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸுக்குச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார்.

19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டது பற்றி செய்தி சேகரிக்க சென்றதாகக் கூறிய அவர் மீது, பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாகக் கூறி கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, பிணைக் கோரிய அவரின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதையடுத்து, இன்று உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித், "கப்பான், இரண்டு ஆண்டுகளாக காவலில் வைக்கப்பட்டது கருத்தில் கொள்ளப்படுகிறது" என்றார்.

பத்திரிக்கையாளர் கப்பான் அடுத்த 6 வாரங்களுக்கு டெல்லியிலும், அதன் பிறகு கேரளாவிலும் போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என தெரிவித்த நீதிமன்றம், மூன்று நாள்களில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மேலும் அவர் தனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஹத்ராஸில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மலையாள செய்தி இணையதளமான அழிமுகத்தின் செய்தியாளர் சித்திக் கப்பான் உத்தரப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உடன் தொடர்பு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தனக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளதாக சித்திக் கப்பன் தெளிவுப்படுத்தியிருந்தார்.

இன்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு, கப்பான் கலவரத்தைத் தூண்டுவதற்காக பணம் பெற்றதாகவும், அவர் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் கூட இல்லை என்றும் வாதிட்டது. "அவர் கலவரத்தை உருவாக்கி வெடிபொருட்களைப் பயன்படுத்த முயன்றார். அவர் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர். அது ஒரு பயங்கரவாத அமைப்பு" என உபி அரசுக்காக ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி தெரிவித்தார்.

கப்பானுக்கு எதிரான சமர்பிக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், "கப்பானிடம் என்ன கண்டுபிடிக்கப்பட்டது? வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரிடமிருந்து பொருட்கள் கிடைக்கவில்லை, ஆனால், காரில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவை, பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை," என்று தலைமை நீதிபதி லலித் கூறினார். கப்பானின் வழக்கறிஞர் கபில் சிபல், அவரிடம் இருந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதைப் படிக்குமாறு அரசுத் தரப்பை கேட்டு கொண்டார். "எந்தப் பொருள் ஆபத்தானது. ஏதேனும் சேதம் விளைவிக்கக்கூடிய புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கப்பானிடம் இருந்து கைப்பற்றப்பட்டது டூல்கிட் என்றும் அது ஒரு கிளர்ச்சி அல்லது பயங்கரவாதத்தை தூண்டுவதற்கு விவரிக்க பலரால் பயன்படுத்தப்படும் வார்த்தை என்றும் உபி அரசு தெரிவித்தது. அதற்கு நீதிபதிகள், ''அந்த புத்தகத்தில் நீங்கள் சொல்பவை எதுவும் இல்லை" என தெரிவித்தனர். இறுதியாக, அவருக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பானுக்கு எதிராக அமலாக்கத்துறை இயக்குனரகம் தாக்கல் செய்த பணமோசடி வழக்கும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிலும் அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)