ஆவினில் பால் பாக்கெட்டை திருடும் திண்டுக்கல் ஊழியர்: வீடியோ வெளியான நிலையில் சஸ்பெண்ட்
திண்டுக்கல் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட்டுகளை ஊழியர்கள் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தினமும் சுமார் 30,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், பால் பதப்படுத்தப்படும் நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள் சிலர் பால் பாக்கெட்டுகளை திருடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பால் பாக்கெட்டை திருடும் நபர்களின் உருவம் நன்றாக பதிவாகியுள்ளது. இதையடுத்து ஆவின் பொது மேலாளர் இளங்கோ, முதல் கட்டமாக அங்கு பணியாற்றி வரும் முகமது அஷ்ரப் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதில் தொடர்புடைய இரண்டு ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் ஆவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.