திருமங்கலம் ஒன்றிய அரசு அலுவலகத்தில் பிடிஓ செய்கிற செயலா இது? - சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக சௌந்தர் ராஜன் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அலுவலக நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் புகை பிடிப்பது போன்று புகைப்பட ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகருக்கு புகார் வந்துள்ளது. மேலும் அவர்மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வந்த நிலையில் விசாரணை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பணி நேரத்தின்போது ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தர் ராஜனை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பணியிட நீக்கம் செய்யப்பட்ட சௌந்தர் ராஜன் மதுரை மாவட்டத்தை விட்டு அனுமதியின்றி வேறு மாவட்டங்கள் செல்லக்கூடாது எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.