சோழிங்கநல்லூரில் உபர் ஆட்டோவில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறல்
சென்னை சோழிங்கநல்லூரில் உபர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறி நடந்துகொண்டதாக அந்த பெண் நேற்றிரவு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இரவு புகார் கொடுத்த அந்த இளம்பெண் இதுகுறித்து அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தது வைரலானது. அதை தொடர்ந்து செம்மஞ்சேரி காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சென்னை தரமணியில் உள்ள தனியார் இதழியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். நேற்றிரவு அவரது தோழி ஒருவருடன் ஈசிஆரிலிருந்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு உபர் ஆட்டோ புக் செய்து அதன்மூலம் வந்ததாக தெரிவித்துள்ளார். ஹோட்டல் வந்தவுடன் இறங்கியபோது ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது ஆட்டோ புக் செய்த அவர்களை ஆட்டோவில் ஏற்றுவதற்கு முன்பு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி என்னிடத்தில் இல்லை பணமாக கொடுக்க தங்களிடம் பணம் உள்ளதா என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் சரி என்று கூறியதால் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர்கள் தங்கும் விடுதியின் முகப்பு வாயிலில் வந்து ஆட்டோவை நிறுத்தியதும் ஆன்லைனில் பணம் செலுத்துகிறேன் என்று கூறியதால் என்னிடத்தில் அந்த வசதி இல்லை என்று முன்பே கூறினேனே என்று ஓட்டுநர் கூறியதாகவும் அதனால் அவரது செல்போனை பிடுங்கி அதில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்துள்ளார்.
இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் தனது செல்போனை கொடுங்கள் என்று கூறி செல்போனை அவரிடமிருந்து செல்போனை பிடுங்கும்போது அந்த பெண்ணின் கை தோல்பட்டையில் தெரியாமல் பட்டது என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது ஆட்டோ வந்து நின்றதும் முதலில் ஒரு பெண் இறங்கினார். சிறிது நேரமாக ஆட்டோவில் அமர்ந்திருந்த புகார் அளித்த பெண் திடீரென கீழே இறங்கி வந்து தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக அவரது தோழியிடம் கூறும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
மேலும் இந்த பிரச்சனை நடந்தபோது தன்னை காப்பாற்றுமாறு கதறியதாகவும் உதவிக்கு யாரும் வரவில்லை என்று சமூக வலைதளத்தில் புகார் அளித்த பெண் சமூக வலைதங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால் சிசிடிவி கேமராவில் ஆட்டோவை விட்டு கீழே இறங்கியதும் அடுத்தடுத்த நொடிகளில் ஏராளமானோர் அங்கு குவிந்தது பதிவாகியிருந்தது. பின்னர் ஆட்டோ ஓட்டுநர் மீது 354A என்ற பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.