சைதாபேட்டை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்ய முயன்ற கும்பல் கைது...

 


பிரபல ரவுடி பாலா. இவர் மீது தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி சென்னை அசோக் நகரில் சென்னையின் பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவகுமாரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. அதில் முக்கிய குற்றவாளியாக மதுரை பாலா கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி அமைந்தகரை செனாய் நகர் பூங்கா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பைனான்சியர் ஆறுமுகம் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்திலும் மதுரை பாலாவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கூலிப்படை தலைவனான மதுரை பாலா சென்னையில் பல பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களின் தனது கூலிப்படைகளை ஏவி குற்ற சம்பவங்களை நிகழ்த்தி வந்துள்ளான். இந்த நிலையில் ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கூலிப்படை தலைவனான மதுரை பாலாவை நேற்று மதியம் சரியாக 2:30 மணியளவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அசோக் நகர் போலீசார் அழைத்து வந்திருந்தனர்.


மதுரை பாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் தகவல் அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கத்தியுடன் நீதிமன்றத்திற்கு வெளியில் பொதுமக்களுடன் கலந்து நின்றுள்ளனர்.  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போது மறைந்திருந்த மர்ம  கும்பல், கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டு மதுரை பாலா நிலை குலைந்த உடன், கத்தியுடன் வந்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொலை முயற்சி தாக்குதலால் வழக்கு விசாரணைக்காக வந்திருந்த நபர்கள், வழக்கறிஞர்கள் பதறி ஓடியுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியுள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களான ராஜலட்சுமி, கிருஷ்ணவேணி, சசிகலா ஆகியோர் கத்தியுடன் ஓடிய மர்ம கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

வழிக்காவல் பணியில் இருந்த வேலூர் மாவட்ட காவலரான பாரதி என்பவருக்கு அந்நபர்கள் வைத்திருந்த கத்தி கிழித்து இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டது. மூன்று நபர்கள் பிடிபட மற்ற இருவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிடிபட்ட மூன்று நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் ஷெனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல், அருண், குன்றத்தூரைச் சேர்ந்த அப்துல் மாலிக் என்பது தெரிய வந்தது. பிடிபட்ட மூன்று நபர்களுமே அமைந்தகரையை சேர்ந்த ரவுடி அப்பாஸ் கும்பலை சேர்ந்தவர்கள் .

கடந்தாண்டு மார்ச் மாதம் அசோக் நகரில் ரவுடி சிவக்குமாரை கொலை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான கூலிப்படை தலைவன் மதுரை பாலா, ரோகித் மற்றும் அப்பாஸ் உள்ளிட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கூட்டாளிகளான இந்த மூவரில் ரவுடி மதுரை பாலாவை தவிர மற்ற இருவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த நிலையில் மதுரை பாலா இடத்திலிருந்து ரோஹித் சென்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்து மாமூல் வசூல் செய்து வந்துள்ளான். இதனால் ஒரே அணியிலிருந்த ரோஹித்துக்கும், அப்பாஸுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.

சிறையில் இருந்த கூலிப்படை தலைவனான மதுரை பாலாவுக்கு அப்பாஸ் இந்த பிரச்சனை குறித்து தெரிவித்து வந்துள்ளார். ஆனால், மதுரை பாலா ரோஹித்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளார்.  மதுரை பாலா இருப்பதால்தான் ரோகித்துக்கு அதிகாரம் கிடைக்கிறது. அவரை கொலை செய்துவிட்டால் ரோஹித்தின் ஆட்டம் அடங்கிவிடும் என நினைத்த அப்பாஸ், மதுரை பாலாவை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தான் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடுவதற்காக வேலூர் சிறையில் இருந்த மதுரை பாலாவை போலீசார் நேற்று மதியம் சைதாபேட்டை நீதிமன்றம் அழைத்து வந்துள்ளனர். இதனை முன்கூட்டியே அறிந்த அப்பாஸ் மதுரை பாலாவை நீதிமன்ற வாசலிலேயே கொலை செய்ய ஐந்து நபர்களை கத்தியுடன் அனுப்பி வைத்துள்ளார். சரியாக 2.30 மணி அளவில் மதுரை பாலாவை போலீசார் நீதிமன்றத்திற்குள் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லும் போது அப்பாஸ் நண்பர்களான சக்திவேல், அருண், அப்துல் மாலிக் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மதுரை பாலா முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து பின் கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)