தேனி அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் தவறி விழுந்த 8 வயது சிறுமி உயிரிழப்பு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சி சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவரது மகள் கார்த்திகா தனது தந்தை வீட்டிற்கு 8 வயது மகள் ஹாசினி ராணியுடன் தனது கணவர் முத்து சரவணனின் ஊரான வருசநாடு மூலக்கடையிலிருந்து வந்துள்ளார்.
சமத்துவபுரம் பகுதியில் தாத்தவின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி ராணி வீட்டின் அருகே பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக தோண்டி வைத்திருந்த 5 அடி பள்ளக் குழியில் எதிர்பாராத விதமாக விழுந்து உள்ளார்.
பள்ளத்தில் மழை நீர் அதிக அளவில் கிடந்ததால் சிறுமி நீரில் மூழ்கியுள்ளார்.
நீண்ட நேரம் சிறுமியின் சத்தம் கேட்காததால் சிறுமியை காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் தேடிய தாயார் மகளின் செருப்பு பள்ளத்தில் உள்ள நீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பள்ளத்தில் இறங்கி பார்க்கும் போது சிறுமி மயக்க நிலையில் இருப்பதை கண்டு
உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த ஓடைப்பட்டி காவல் நிலைய போலீசார் சிறுமியின் உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பேரூராட்சி நிர்வாகம் தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.-தேனி மாவட்ட நிருபர்S. பாவா பக்ருதீன்