சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை-உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

 




நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று தெரிவித்த  சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு அளித்தது.

கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில், ரெட்பிக்ஸ் சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் முன்வைத்த வாதம்:

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்கு உட்பட்டதல்ல. ஆகவே இந்த வழக்கை மதுரைக்கிளை விசாரிக்க இயலாது. 

நீதித் துறையில் இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை. பிராமணர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3% இருந்தாலும், நீதித்துறையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் பெருமளவில் பட்டியல் இனத்தவர்கள் இருந்தாலும், நீதித் துறையில் அவர்களின் பங்கு மிகக்குறைவாகவே உள்ளது.

அருந்ததியர் இனத்தில் ஒரு நீதிபதி கூட இல்லை. இதனால், பட்டியலின நீதிபதிகள் வழக்குகளைக் கையாள்கையில், அவர்களின் முழு பங்கையும் அளிக்க இயலவில்லை.

பிற நீதிபதிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித் துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே இந்த கருத்தை பதிவு செய்துள்ளேன். எனது சில கருத்துக்களை தனியே பார்க்கும்போது அது மிகுந்த பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலானதாகத் தோன்றலாம்.

ஆனால், அதன் பின்புலத்தோடு உண்மை விளங்கும். நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் இருந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செய்யுமாறு வெளியிட்ட பதிவுகளை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்