கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பில் இருந்த இரு தலைமை காவலர்கள் உட்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும், இதனால் கொலை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் கஞ்சா விற்பனை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட காவல்துறைமெத்தனப் போக்கை கடைபிடித்து வந்தனர்.
இதற்கிடையே கஞ்சா விற்பனை குறித்து வேலூர் மண்டல காவல் தலைவருக்கு அதிக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் தனி பிரிவு போலீசார் விசாரணை
மேற்கொண்டனர். இதில், கஞ்சா விற்பனை செய்து வந்த நபர்களுக்கு மாவட்டத்திலுள்ள காவலர்கள் சிலர் துணையாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு குழுவை அமைத்து மறைமுக விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையின் முடிவில், அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் கண்ணன், சோளிங்கர் தலைமை காவலர் வேணுகோபால், மற்றும் அரக்கோணம் தாலுகா காவல் நிலைய எழுத்தர் ரமேஷ் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ள வேணுகோபால், கண்ணன் ஆகிய இருவரும் கடந்த 13.09.2022 ஆகஸ்ட் மாதத்தில் குற்ற செயல் தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக இவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.