2 கழிப்பிடங்களை கட்டியது சர்ச்சையான நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நூதன விளக்கம்!
கோவையில் ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்களை கட்டியது சர்ச்சையான நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நூதன விளக்கத்தை அளித்துள்ளது.
கோவை மாநகராட்சியின் 66 ஆவது வார்டு அம்மன்குளம் பகுதியில் ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள் கட்டப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் விளக்கமளித்துள்ள கோவை மாநகராட்சியின் பொறுப்பு ஆணையாளர் ஷர்மிளா, சிறுவர்கள் பயன்படுத்துவதற்காகவே அவ்வாறு கழிப்பிடம் அமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதில் சர்ச்சை எழுந்த கழிப்பறை 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது எனவும் பெரியவர்களின் கண்காணிப்பில் சிறுவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வாறு அமைக்கப்பட்டதாகவும் குழந்தைகள் கழிப்பறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டால் வெளியே வர முடியாது என்பதாலேயே கதவு பொருத்தப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும் சிறுவர்கள் உபயோகப்படுத்தாததால் சம்பந்தப்பட்ட கழிப்பிடங்களை பெரியோர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்திருப்பதாக கோ மாநகராட்சி ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடம் என விளக்கமளித்தாலும் அருகருகே கழிப்பிடங்களை அமைப்பதுதான் சுகாதாரமான நடைமுறையா என தற்போது புதிய கேள்வி எழுந்துள்ளது.