முதலமைச்சரை கனியாமூர் பள்ளி மாணவியின்ஸ்ரீமதியின் தாயார் மற்றும் தந்தை பெற்றோர் சந்திப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் மகளின் இறப்புக்கு நீதி கேட்டு நடை பயணமாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க உள்ளதாக மாணவியின் தாயார் செல்வி அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மாணவியரின் தாய் செல்வி முதலமைச்சரை சந்திக்க நேரம் பெற்று தந்தார். இதன் காரணமாக மாணவியின் தாயார் மேற்கொள்ளவிருந்த நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் தனியார் பள்ளியில் இருந்த மாணவியின் தாயார் செல்வி ,தந்தை ராமலிங்கம் ,சகோதரர் சந்தோஷ் ஆகியோர் இன்று முதலமைச்சரை சந்தித்துள்ளனர். மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் சந்தித்து, எங்கள் மகள் மரண விவகாரத்தில் நீதி வேண்டும், வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இதனை தொடர்ந்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார்: முதல்-அமைச்சரை முழுமையாக நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.