காவல் ஆய்வாளர் சீருடையுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் உற்சாகமாக உலா வந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்…அள்ளி கொண்டு போன போலீஸ்
காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர் மாவட்டத் தலைவராக இருப்பவர், துரை. மணிகண்டன். கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிகோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவிக்காதபோதிலும்கூட, விலைவாசி உயர்வுக்கு எதிராகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் இவர், காவல் ஆய்வாளர் சீருடையுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நகரில் வலம் வந்து கொண்டிருந்தார்.
இதனை அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் துரை. மணிகண்டனை கைது செய்தனர். இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் குறும்படத்துக்காக இவ்வாறு சென்றதாக விளக்கம் அளித்தார். இதையடுத்து காவல் துறை ஜாமீனில் துரை மணிகண்டன் விடுவிக்கப்பட்டார்