மாமியார் பெயரில் சொத்து குவிப்பு: பதிவாளர் மீது பாய்ந்தது வழக்கு

 


கோவை: மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி பெயரில் சொத்து குவித்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரி மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

பத்திரப்பதிவுத்துறையில் கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றியவர் செல்வக்குமார், 46. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், கடைசியாக கோவை மாவட்ட பதிவாளராக (தணிக்கை) பணியாற்றினார். தற்போது துறை ரீதியான புகார்கள், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செல்வக்குமாரின் மாமியார் பாண்டியம்மாள்; ஓய்வூதியம் பெறுபவர். செல்வக்குமாரின் மனைவி முகிலின் சகோதரி தென்றல், காரைக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.செல்வக்குமார், கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ஸ்ரீ வராகமூர்த்தி அவென்யூவில் மனைவியின் சகோதரியான தென்றலின் பெயரில் ஆடம்பர பங்களா கட்டியுள்ளார்.

இவர் 2009ம் ஆண்டு ஜன.,1 முதல் 2012ம் ஆண்டு டிச.,31 வரை, தன் மாமியார் பாண்டியம்மாள் பெயரிலும், மனைவியின் சகோதரி தென்றல் பெயரிலும் சொத்துக்களை வாங்கியுள்ளார்.பாண்டியம்மாள், தென்றல் ஆகியோரது சொத்துக்களின் மதிப்பு, 2009 ஜன.,1ல் வெறும் 11 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்த மதிப்பு, 2012 டிச.,31ல் 89 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த காலத்தில் அவர்களது வெளிப்படையான வருவாய் ஆதாரங்களின் மூலம் 27 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்திருக்க முடியும்.ஆனால், வருவாய்க்கு அதிகமாக 65 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் அவர்கள் பெயரில் குவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் செல்வக்குமார், அவரது மாமியார் பாண்டியம்மாள், மனைவியின் சகோதரி தென்றல் ஆகியோர், உண்மையான வருவாய் ஆதாரத்தை காட்டிலும், 242 சதவீதம் அதிகமாக சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்பது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு சட்டங்களின் அடிப்படையில், மாவட்ட பதிவாளர் செல்வக்குமார், அவரது மாமியார், மனைவியின் சகோதரி ஆகியோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்