முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய்
மகளின் மரணத்துக்கு நீதி கோரி நடைபயணம் அறிவித்திருந்த நிலையில், அதை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஐகோர்ட்டு உத்தரவின்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து அதன் ஆய்வறிக்கையை நேற்று முன்தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின் நகலை கேட்டு நேற்று ஸ்ரீமதியின் பெற்றோர் சார்பில் அவரது வக்கீல் காசிவிஸ்வநாதன், விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, புதுச்சேரி ஜிப்மர் குழு ஆய்வறிக்கையை நாளை (அதாவது இன்று) பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். இதற்காக மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் ராமலிங்கம்- செல்வி ஆகியோர், விழுப்புரம் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
பின்னர் மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஸ்ரீமதி இறந்து 43 நாட்களாகியும் இன்னும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. விழுப்புரம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள மாணவிகள் யார் என்ற விவரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் எனது மகள் ஸ்ரீமதியின் தோழிகள்தானா என்பதை எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் அவர்களின் விவரங்களை நாங்கள் ரகசியம் காப்போம். மேலும் எனது மகள் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் வெளியே வர வேண்டும்.
இதற்காக நீதி கேட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எனது சொந்த கிராமமான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் இருந்து நானும், எனது கணவரும் நடைபயணமாக சென்னைக்கு சென்று தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளின் மரணத்துக்கு நீதி கோரி நடைபயணம் அறிவித்திருந்த நிலையில், அதை ரத்து செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.