சென்னையில் 2 மாதங்களில் 2 விசாரணை கைதிகள் மரணம்…தொடரும் அதிர்ச்சி... 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!!
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்ற ராஜசேகர் (வயது 31). இவர், பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார். இவர் மீது சோழவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 22-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் ஒரு திருட்டு வழக்கில் விசாரணைக்காக ராஜசேகரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை அவரிடம் இருந்து திருட்டு நகையை பறிமுதல் செய்வதற்காக போலீசார் ராஜசேகரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது ராஜசேகர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் கொடுங்கையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி அறிந்த ராஜசேகரின் உறவினர்கள், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி முன்பு திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 54 நாட்களுக்கு முன்பாக, சென்னை தலைமை செயலக காவல்நிலைய குடியிருப்பு வளாக போலீசார் தாக்கியதால், விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று பெரும் நிலையில், சென்னையில்
மற்றொரு விசாரணை கைதி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.இதனிடையே, விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததை தொடர்ந்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர்
காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.உயிரிழந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போலீசார் யார் யார்? இரவு காவலில் காவல்நிலையத்தில் வைத்திருந்தவர்கள் யார்? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்திஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.