நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வாலிபர் சென்னை அமைந்தகரை செனாய் நகர் சம்பவத்தின் பின்னணி
சென்னையில் பட்டப் பகலில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வாலிபர் படுகொலை செய்யப்பட்டதில், நாலு பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் செய்த இந்த படுகொலை வீடியோ பார்போரை பதற வைத்தது. சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகள் அடையாளம் தெரிந்திருக்கிறது. அதில் இரண்டு பேர் சரணடைந்திருக்கிறார்கள். பழிக்கு பலியாக பைனான்சியர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்திருக்கிறார் இவர். இதற்காக அவர் அண்ணா நகரில் அலுவலகம் வைத்திருக்கிறார். சேத்துப்பட்டில் இருந்து கடந்த 18ம் தேதி அன்று மதியம் தனது அலுவலகத்திற்கு பைக்கில் சென்று இருக்கிறார் ஆறுமுகம். அப்போது அமைந்தகரை செனாய் நகர் வழியாக சென்றபோது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து சென்று வழிமறித்து இருக்கிறார்கள். பைக்கில் இருந்து இறங்கிய 4 பேரும் அரிவாளை எடுத்து வெட்ட ஓடி வந்திருக்கிறார்கள். இதை பார்த்து விட்ட ஆறுமுகம் தப்பி ஓடி
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் தான் அவர் ஓடி இருக்கிறார். ஆனாலும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி இருக்கிறது. கை, கால், உடல், தலை என்று சரமாரியாக வெட்டியதில் ஆறுமுகம் மயங்கி ரத்த வெள்ளத்தில் சரிந்து இருக்கிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைந்த கரை போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருந்தனர். அந்த வழியாக அந்த சமயத்தில் காரில் சென்ற ஒருவரும் இதை படம் பிடித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரல் ஆகி வந்தது.
அப்பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் அந்த படுகொலையை செய்த குற்றவாளிகள் பழைய குற்றவாளிகள் ஆன சந்திரசேகர், ரோகித் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் என்று தெரிய வந்திருக்கிறது .
இந்த நிலையில் குற்றவாளிகள் சந்திரசேகர், ரோகித் ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சரணடைந்துள்ள இரண்டு பேரையும் வரும் திங்கட்கிழமை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
நடத்தும் போது தான் கொலைக்கான பின்னணி தெரியவரும் என்கின்றனர் போலீசார். ஆனாலும் கடந்த 2020 ஆம் ஆண்டில் சேத்துப்பட்டு பகுதியில் வடிவழகு என்பவரை கொலை செய்த வழக்கில் பைனான்சியர் ஆறுமுகத்திற்கு தொடர்பு இருப்பதால் பழிக்கு பழியாக இந்த படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளியான ஆறுமுகம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், டிபி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பெண் பாலியல் வன்கொடுமை, வெடிகுண்டு வழக்கு ,அடிதடி வழக்கு என்று நான்கு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதன் காரணமாகவும் முன்விரோதத்தால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.