அம்மா உணவகத்தில் அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் விற்பதாக புகார் - முழுவிவரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருவதால் அம்மா உணவகத்துக்கு இன்றும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து இங்கு ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதும், ஜெயலலிதா படங்களை அகற்றி கருணாநிதி படங்களை வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தொடர் சர்ச்சையை ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இட்லி மற்றும் 5 ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லெட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகளும், மதிய வேளையில் ரசம், மோர், ஆம்லெட் என அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து விற்பனை செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
மேலும் புதூர் 14 வது வார்டு திமுக கவுன்சிலர் அம்மா உணவகத்திற்காக வழங்கப்படும் மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் ஈட்டுவதாகவும் நாள்தோறும் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்றுக் கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த உணவுகளை தயாரிப்பதற்காக ரேசன்கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு ,உளுந்து, ரவை போன்றவை பயன்படுத்துவதாகவும், ரேசன் அரிசி பொருட்கள் அம்மா உணவகத்திற்கு எப்படி வருகின்றது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இது போன்று பல்வேறு வகையான உணவுகளை விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கான பில்களை பணியாளர்கள் தாங்களாகவே பேப்பரில் பில் எழுதி கொடுப்பதால், மாநகராட்சிக்கு முறைகேடான கணக்கை ஒப்படைத்து மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்துவதோடு, அம்மா உணவகத்தால் கடும் நஷ்டம் என கூறி அத்திட்டத்தை முடக்குவதற்கான முயற்சி எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதூ.
ஏழை எளியோரின் பசி போக்க செயல்பட்ட அம்மா உணவகத்தை அப்பகுதி திமுக கவுன்சிலர் அந்தோணியம்மாள் என்பவர் இதுபோன்று மாநகராட்சி அனுமதியின்றி இதர உணவுப் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சை ஏற்பட்டது.
இது குறித்து சம்மந்தபட்ட கவுன்சிலர் அந்தோணியம்மாளிடம் கேட்ட போது... கொரோனா காலகட்டத்தில் மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டாக வழங்கிய பொருட்களைக்கொண்டு பூரி, ரசம், மோர், ஆம்லெட், உள்ளிட்டவற்றை மக்களுக்கு கொடுத்ததாகவும், அப்போது கொடுத்த பொருட்கள் இப்போது வரை இருப்பில் உள்ளதால் அவை வீணாகி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பூரி ஆம்லெட் உள்ளிட்ட உணவுகளை கொடுத்ததாகவும், முறைகேட்டில் எதுவும் ஈடுபடவில்லை எனவும், மாநகராட்சி கொடுத்த பொருட்களின் விவரம், அம்மா உணவகத்தில் வாங்கப்படும் பொருட்களுக்கு முறையாக ரசீது விவரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
அம்மா உணவகத்தில் பணியாற்றும் அதிமுகவை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் சில நபர்களுடன் சேர்ந்து கொண்டு பொய்யான புகார்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.