பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. சென்னை போக்குவரத்து காவல் அதிரடி!

 


சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.


இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை சென்னையில் மட்டும் இருச்சக்கர வாகன விபத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 80 பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதால் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 18 பேர் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாததால் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனம் மூலமாக 841 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அந்தவகையில், இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது குறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "வருகின்ற திங்கட்கிழமை (23-05-2022) முதல் இருசக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்" என தெரிவித்தார்.

மேலும், "ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் நபர்கள் என இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், "இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடரும்" என அவர் தெரிவித்தார்.

அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு சென்னை போக்குவரத்து காவல் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)