பண மோசடி: யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்கம் செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது.
கோயில் புனரமைப்பு பணிக்காக, இந்து அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் செயலி மூலம் ரூ. 36 லட்ச வசூல் செய்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளரும், யூ-ட்யூபருமான கார்த்திக் கோபிநாத் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது இது தொடர்பாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் செய்யப்பட்ட விசாரணையில் பணம் வசூலிக்க கார்த்திக் கோபிநாத் 2 வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளதாகவும், மோசடிக்கு அந்த வங்கி கணக்குகளை அவர் பயன்படுத்தி வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடிக்கு அந்த வங்கி கணக்குகளை அவர் உபயோகித்தது உறுதியானதை தொடர்ந்து, அவற்றை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுத முடிவு செய்துள்ளனர். மேலும் கார்த்திக் கோபிநாத்தின் செல்போனை கைப்பற்றி சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. செயலி மூலம் பணம் வசூலித்தது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.