ரூ.19 லட்சம் வழிப்பறி வழக்கு – 5 பேர் கைது ரூ.11 லட்சம் பறிமுதல்

 


நாமக்கல் அருகே 19 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த திருமலைப்பட்டி அருகே உள்ள கும்மநாயக்கனூரை சேர்ந்தவர் ஜீவா (25). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர், பேளுக்குறிச்சியைச் சேர்ந்த ஹரிஹரசுதனுக்கு சொந்தமான 40 மூட்டை மிளகாயை விருதுநகரில் விற்று விட்டு சொந்த ஊருக்கு கடந்த 20 ஆம் தேதி திரும்பியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து ஸ்கூட்டரில் எடையபட்டி வழியாக பேளுகுறிச்சிக்கு மிளகாய் வியாபாரியிடம் பணத்தை வழங்க சென்றுள்ளார். அப்போது எடையப்பட்டி ஏரிக்கரை அருகே ஸ்கூட்டரை மறித்த மர்ம கும்பல், டிரைவர் ஜீவாவின் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.19 லட்சம் பணம், ஸ்கூட்டர் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.


இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் ஜீவாவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தனர். இதில் சிலரது செல்போன்கள் தொடர்ந்து சுவிட் ஆப்-ல் இருந்ததை அறிந்து அவர்கள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில், திருமலைப்பட்டியைச் சேர்ந்த ஒருவரும், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5-க்கும் மேற்பட்டோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனது மாமியார் வீட்டில் பதுங்கியிருந்த தமிழ் (எ) சுபாஷை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் கர்நாடக மாநிலம் பெங்களூர் அத்திபள்ளியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கே பதுங்கி இருந்த 3 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், சரக்கு ஆட்டோ ஓட்டுனர் ஜீவாவின் திட்டத்தின் படியே வழிப்பறி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் ஜீவா, திருமலைப்பட்டியை சேர்ந்த சுபாஷ், லோகேஸ்வரன், சரவணகுமார், தமிழ் (எ) சுபாஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த இருந்து 11 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்