'சாத்தான்குளம் சம்பவத்தை போன்றுதேனிமாவட்டம் தேவதானப்பட்டி'? - காவல்துறையினர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்

 


சாத்தான்குளம் சம்பவத்தை போன்றுதேனிமாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்திலும் ஒரு இளைஞரை போலீசார் சட்டவிரோதமாக அடித்து துன்புறுத்தி உள்ளதாக மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி கிராமம் அருகேயுள்ள சூசையப்பர் கிராமத்தில் வசித்து வரும் செல்வம் (45) என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் அப்போது உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் பிரபு என்பவர் சட்டவிரோதமாக தாக்கியதாக அவரது மனைவி மங்கையர்க்கரசி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணைக்கு செல்வம் இன்று (ஏப்ரல் 8) மதுரை மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகவிருந்த நிலையில், அதனை தடுக்கும் நோக்கில் செல்வத்தின் மகன் ரிசாத் ராஜ் (21) என்பவரை தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் தற்போது ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜசேகரன் என்பவரும் சில காவலர்களும் கைது செய்துள்ளனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரிசாத் ராஜை ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் விசாரணை செய்வதாக கூறி அழைத்த சென்று காவல் நிலையத்தில் மூன்று நாட்கள் வைத்திருந்து சட்ட விரோதமாக லத்தியாலும், இரும்பு கம்பியாலும் தாக்கியதில் அவர் கடுமையாக காயங்களுக்கு உள்ளானதாகவும், சிறுநீர் கழிக்கும்போது இரத்தம் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதன் பின்னர், பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ரிசாத் ராஜ் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி அளித்த உத்தரவின் மூலம் தேனி மருத்துவமனையில் ரிசாத் ராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், அவருக்கு வழங்கப்பட்ட உடல்தகுதி சான்றிதழிலும் முறைகேடு செய்து அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று (ஏப்ரல் 7)  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசினர் விடுதியில் இயங்கி வரும் மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று ஒரு புகார் மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கூறுகையில்,

"சாத்தான்குளம் சம்பவத்தை போன்று மற்றுமொரு சம்பவம் தேனி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்று உள்ளது.

தேவதானப்பட்டி காவல் நிலைய சிசிடிவி காட்சிகள், ரிசாத் ராஜுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முழு விபரங்கள், அவர் மீது பதியப்பட்ட வழக்கின் விபரங்கள் ஆகியவை உடனடியாக மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

மேலும், இந்த குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜசேகரன், அவருக்கு உடந்தையாக இருந்த காவலர்கள் மற்றும் பெரியகுளம் டி எஸ் பி முத்துக்குமார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரிசாத் ராஜுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவும், ரிசாத் ராஜின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ரிசாத் ராஜின் மனைவி மோனிஷா கூறுகையில்,"என் கணவரை அழைத்து சென்ற காவல் நிலையத்தில் விசாரித்த போது அங்கு அவர் இல்லை என திருப்பி அனுப்பி விட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ரிசாத் ராஜை அழைத்து சென்ற போது காவல் நிலையத்தில் நடந்தவற்றை வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என காவல் துறையினர் மிரட்டி உள்ளனர். என் கணவர் மீது பொய் வழக்கு பதிந்து உள்ளனர், அது குறித்து விசாரித்து அவருக்கு விடுதலை பெற்று தர வேண்டும்" என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்