சரமாரியாக அறைந்த காவலர் - சிசிடிவி கேமிராவில் சிக்கிய காட்சிகள்
குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில் காவலர் ஒருவர், ஒரு சிறுவனை சரமாரியாக தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, இது தொடர்பாக அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின் வதோதராவில் உள்ள நந்தேசரி சந்தையில் சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் 13 வயது சிறுவனை, சான்னி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சக்திசிங் பவ்ரா பலமுறை அறைந்து சரமாரியாக தாக்கியுள்ளார், இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி, "பவ்ரா தனது வாகனம் மூலமாக நகரத்தில் உள்ள மற்றொரு காவல் நிலையத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்கும்போது அந்த சிறுவன் தன்னைப் பார்த்து ஏதோ முணுமுணுத்ததாக கூறுகிறார். உடனடியாக அவர் கீழே இறங்கி, அச்சிறுவனை பல முறை அறைந்து கையை முறுக்கி குத்தினார். இது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வதோதரா போலீஸ் கமிஷனர் ஷம்ஷேர் சிங் தனது ட்விட்டரில், “இதுபோன்ற தவறான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. உடனடியாக அந்த காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், இது தொடர்பான விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.