ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு...

 


1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் து}தரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

இன்னும் சில அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

3) நபி(ஸல்)அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: நஸயீ)

4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ''ஸஹர் உணவு உண்பதுதான்"" என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

 (ஆதாரம்: நஸயீ)

விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது "வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்" இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!