லால்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தார்,விஏஓவை தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

 


திருச்சி மாவட்டம் லால்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறை கைது செய்தனர்.

கல்லக்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (40). நடராஜனுக்கு, முதுவத்தூர் கிராமத்தில் காலிமனை உள்ளது. இவரது பெயரில் உள்ள பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய லால்குடி தாலுகா அலுவலகத்துக்கு ஆன்-லைன் மூலம் லட்சுமி விண்ணப்பித்திருந்தார். பின்னர், தனது மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க அவர், தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு புள்ளம்பாடி மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த பிரபாகரன் (39), முதுவத்தூர்  கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த சதீஷ்குமார் (35) ஆகியோர் பணியில் இருந்தனர்.

அவர்கள் ரூ.15 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் திருத்தம் செய்து தருவோம் என்று லட்சுமியிடம் கூறியுள்ளனர். பின்னர் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் கேட்டனர். லஞ்சம் தர விரும்பாத லட்சுமி இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு  தகவல் கொடுத்தார். உடனே லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள்  அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை வாங்கிய லட்சுமி, லால்குடி தாசில்தார் அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றார். அங்கு இருந்த துணை தாசில்தார் பிரபாகரன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து அவர்கள் பணத்தை  பெற்றபோது, தாலுகா அலுவலகத்தில் சாதாரண உடையில் அங்கு இருந்த திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் காவல் துறையினர் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல், சேவியர் ராணி ஆகியோர் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் இருவரிடமும் காவல் துறையினர்  பல மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் தாலுகா அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் பிரபாகரன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர்  இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சிறப்பு நீதிபதி ஆர்.கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் லால்குடி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 திருச்சி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து அரசு அலுவலங்களில் பணிபுரியும் அதிகாரிகள் எந்த வேலையாக இருந்தாலும் லஞ்சம் கேட்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக அரசு அலுவலங்களில் பணியாற்றும் அதிகாரிகள்,  லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக யார் நடந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரித்து உள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)