ஆடு திருடர்களிடம்.. எஸ்.ஐ. லஞ்சம் கேட்ட ஆடியோ - பின்னணி என்ன?

 


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனதால் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்வையிட்ட போது, ஒரு கும்பல் காரில் வந்து ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ந்தேதி வாகன சோதனையின் போது அந்த கும்பல் பிடிபட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சாத்தையன் மகன் செல்வராஜ் (வயது 55) மற்றும் காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஆறுமுகம் (வயது 52) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3  கார்களையும் பறிமுதல் செய்தனர்.


மேலும் விசாரணையில் இவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது நாசர் என்பவரின் மகன்களான முகம்மது அராபத் மற்றும் ஆசிக் ஆகிய இருவரும் காரைக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இந்த மட்டன் கடைக்கு ஆடுகளை திருடி கொண்டு வந்து கொடுப்பதற்காக முகம்மது அராபத்தின் கூட்டாளிகளான பாண்டிச்செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரும், அதேபோன்று ஆசிக் என்பவரின் கூட்டாளிகளான செல்வராஜ், ஆறுமுகம் மற்றும் ஆசிக்ராஜா ஆகிய 4 பேரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடுகளை திருடியது  தெரியவந்தது.

மேலும் மேற்படி மற்ற நபர்களில் முகம்மது அராபத், பாண்டிச்செல்வம் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலைய கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து அப்போது சிறையில் இருப்பதும், இந்த கும்பலுடன் தொடர்புடைய  மேலும் சிலர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ளவர்களை  தனிப்படை போலீசார்  தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் தனிப்படையில் இருந்த விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன், ஆடு திருடும் வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஆடு திருடும் கும்பலிடம் குண்டர்தடுப்பு சட்டத்தின் கைது செய்யாமல் இருக்கவும், அதில் காப்பாற்றுவதற்காக ரூ 3 லட்சம் பணம் கேட்டதாக சில ஆடியோக்களும், திருச்சியில் ஆடு திருடும் கும்பலை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை , பிடிக்க உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன் முயற்சி செய்வதாக சமூக வளைதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.


ஒரு ஆடியோவில் நான் தான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான அத்துணை பணிகளை செய்ய வேண்டும், சில பெயர்களை சொல்லி அவர்களை நம்ப வேண்டாம் என்று கூறுகிறார். தொடர்ந்து நேரில் வருவதாக கூறுகின்றார். வழக்கில் தொடர்புடையவர் அம்மா என்று பேசு ஒருவர் எவ்வளவு வேண்டும் என்றாலும் தருகிறோம், குண்டாஸ் போட வேண்டாம் என்று கூறுகிறார். பதிலுக்கு பேசிய உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன் 3 (3 லட்சம்) தாருங்கள் என்று கூறுவது போன்று ஆடியோ உள்ளது.

பழிவாங்கும் நோக்கம் - உதவி ஆய்வாளர் விளக்கம் 

மற்ற ஆடியோக்களில் காவல்நிலையத்தில் குற்றவாளிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் மற்றும் வாகனங்களை மீட்பது தொடர்பாக பேசப்பட்ட ஆடியோ உள்ளது. அடுத்தடுத்து வரும் ஆடியோக்கள் காரணமாக காவல்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செல்போன் உரையாடல் குறித்து விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியனிடம் கேட்ட போது, " தன்னை பழிவாங்கும் நோக்கில் இது எடிட் செய்யப்பட்டு பதிவேற்றப்பட்டிருப்பதாகவும், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 குற்றவாளிகளை பிடிப்பதற்காகத்தான், இவ்வாறு குற்றவாளிகளிடம் அவர்களை காப்பாற்றுவது போலவும், அவர்களை நம்ப வைக்க பணம் கேட்டு பேசியதாகவும் கூறினார்.

இதனையறிந்த குற்றவாளிகள் என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தற்போது நான் பேசிய ஆடியோக்களை முழுமையாக பதிவிடாமல் எடிட் செய்து பதிவிட்டுள்ளதாகவும். தான் பல்வேறு நிலுவையில் உள்ள குற்றவழக்குகளை கண்டுபிடித்து இருப்பதாகவும். வேண்டும் என்றே தன்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தமில்லாத, ஆதரமில்லாத தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக தெரிவித்துள்ளர்.

இதற்கிடையில் உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆடியோக்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியன், திருட்டு, கொள்ளை போன்ற நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை கையில் எடுத்து துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்தி திறம்படச் செயல்படுவார். அதற்காக இவர் பலமுறை பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் மாவட்ட காவல்துறையினரிடமிருந்தும், மாவட்ட ஆட்சியரிடமிருந்தும் பெற்றுள்ளார் என்றும், அவரை பிடிக்காத சில மர்ம நபர்களால் தான் இந்த பொய்யான தகவல் கொண்ட ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது என காவல்துறை வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆடியோ வைத்து பேரம்

இந்த ஆடியோவினை வைத்து ஒரு கும்பல் உதவி ஆய்வாளர் கங்கைநாதப்பாண்டியனிடம் ஒரு குறிப்பிட்ட தொகை கேட்டு பேரம் பேசியதாகவும், அந்த பேரம் படியவில்லை என்பதால் இந்த ஆடியோக்களை வெளியிட்டு வருவதாக காவல்துறையை சேர்ந்த மற்றொரு தரப்பு கூறுகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதற்காக தான் உதவி ஆய்வாளர், அவர்களுக்கு இணக்கமாக செயல்படுவது போன்று நடித்தாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டும் தெரிய வரும். ஆடியோ வெளியிட்டவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் தரப்பினர் கூறும் தகவல்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தி வருவதால் முழுமையான விசாரணை நடத்தினால் உண்மைகள் வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்