சோபியாவுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக காவல்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
பாஜக குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக கூறி, அவருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவும், அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் ஒன்றாக பயணித்தனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கியதும், பாஜக குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் மாணவி சோபியா அவதூறாக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தந்தை ஏ.ஏ. சாமி, மாநில உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், "எனது மகளை விசாரணை என்ற பெயரில் மதியம் முதல் இரவு வரை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு போலீஸார் உள்ளாக்கினர்" எனத் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களும் போலீஸாரால் முடக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதன் உறுப்பினர் ஜெயச்சந்திரன் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா கைது சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக அவருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.