வாக்காளருக்கு வினியோகம் செய்த அரிசி மூட்டைகளை பறக்கும் படையினர் பறிமுதல்

 


பட்டுக்கோட்டை நகரில் வாக்காளருக்கு வினியோகம் செய்யப்பட்டு கொண்டிருந்த அரிசி மூட்டைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில், முது நிலை வரைவாளர் பாண்டியராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், காவலர் ராகவேந்திரா ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பட்டுக்கோட்டை நகரில் உள்ள பாளையம் பகுதியில் வாக்காளர்களுக்கு இலவசமாக அரிசி மூட்டைகளை, குறிப்பிட்ட அரிசி கடையில் விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அரிசி வியாபாரம் செய்து வரும் முகமது ஹனிபா (31) என்பவரின் கடையில் ஆய்வு செய்தனர்.

அங்கு வாக்காளர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்ய பெய்டு என்று பில் முன்பே கொடுக்கப்பட்டு, அதனை கொண்டு வரும் வாக்காளர்கள், இந்த கடையில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை பெற்றுச் சென்றதும் தெரியவந்தது. மேலும் பில் புக்கை ஆய்வு செய்ததில் 89 பேருக்கு இவ்வாறு அரிசி மூட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

முகமது ஹனிபாவிடம் நடைபெற்ற விசாரணையில் ராகவன் என்பவர் அவருடைய கடைக்கு வந்து ஒரு லட்சத்து 16 ஆயிரம் பணத்தை கொடுத்து 116 பெய்டு பில் பெற்று சென்றதும், அதனை கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு இலவசமாக அரிசி மூட்டைகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பறக்கும் படையினர், விநியோகம் செய்தது போக மீதமிருந்த 27 மூட்டைகளை பறிமுதல் செய்து, அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 16 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

ராகவன் பட்டுக்கோட்டை நகரில்1வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும்வேட்பாளருக்காக இலவச அரிசி மூட்டைகளை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.