“வாக்காளர்களுக்கு கொடுக்க பட்டுச்சேலைகளை பதுக்கிய அதிமுக வேட்பாளர்” : பறக்கும் படை அதிரடி - பின்னணி என்ன?
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குளித்தலை நகராட்சி 8வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசங்கரியின் கணவர் செந்தில்குமார் வாக்காளர்களுக்கு சேலை மற்றும் 2000 ரூபாய் பணம் பட்டுவாடா செய்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து, அவருக்கு சொந்தமான வெள்ளி நகை கடையில் நேற்று இரவு புகழேந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சென்று சோதனையிட்டதில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 235 பட்டுச்சேலைகளை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி கமிஷனர் சுப்புராமிடம் தேர்தல் பறக்கும் படையினர் சேலைகளை ஒப்படைத்து நிலையில் கடையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மீண்டும் கடைக்கு சோதனையிட சென்றுள்ளனர்.
இதனை அறிந்த அதிமுகவினர் கடை முன்பு திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 2வது முறையாக நள்ளிரவு வரை சோதனையிட்டதில் மேலும் 105 பட்டுசேலைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.