மதிய உணவில் அழுகிய முட்டை? - மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு சிகிச்சை

 


சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குழந்தைகள் அனைவரும், தற்போது அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். முட்டை அழுயதால் பாதிப்பா அல்லது உணவால் பாதிப்பு ஏற்பட்டதா என கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.