ஆந்திராவில் இருந்து மதுரைக்கு பேருந்தில் வந்த கஞ்சா: போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது
வேலூர்: விசாகப்பட்டினத்தில் இருந்து பேருந்தில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை வேலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்திவருகின்றனர்.இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையான கிருஷ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப்புலனாய்வு துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்தனர். அதில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த அனக்கப்பள்ளி கிராமத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திரளி கிராமத்தை சேர்ந்த சீத்தாராமன் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனக்கா பள்ளியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு திருமங்கலத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது.