மாணவன் தர்ணா… பளார் கொடுத்து இழுத்துச் சென்ற ஆய்வாளர் : அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை..!!!
விழுப்புரம் : ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் ஜாதிச் சான்றிதழ் வழங்க மறுத்த அதிகாரியை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவனை காவல்துறை ஆய்வாளர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியை கல்லூரி மாணவர் மகேந்திரா , இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
காட்டு நாயக்கர் ஜாதி சான்றிதழ் கேட்டு ஐந்தாம் வகுப்பு முதல் தொடர்ந்து பலமுறை மனு கொடுத்தும் ஜாதி சான்றிதழ் கிடைக்காத நிலையில் தான் உள்ளது என்பது கல்லூரி மாணவர் மகேந்திராவின் வேதனை அளிக்கும் குற்றச்சாட்டாகும்..
இதுகுறித்து கல்லூரி மாணவன் மகேந்திரா தெரிவித்த கருத்துக்கள்.. ஐந்தாம் வகுப்பு படிக்கத் தொடங்கியது முதல் தொடர்ந்து காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து போராடி வருகிறேன்.
எனக்கு பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உதகை இருந்து ஆராய்ச்சி வல்லுனர்கள் எனக்கு மானுடவியல் அறிக்கை வழங்கியுள்ளனர். இதில் நான் காட்டுநாயக்கன் ஜாதியை சேர்ந்தவர் என்பது அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் இதனை வைத்து பலமுறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களை சந்தித்து மனு கொடுத்தபோது விழுப்புரம் RTO வை அழைத்து கல்லூரி மாணவர்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு வரும் 31ம் தேதிக்குள் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் முப்பதாம் தேதி காலை முதல் ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருந்த நிலையில் இரவு வந்த அதிகாரிகள் உனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க இயலாது என்றும் உங்கள் தாத்தா உள்ளிட்ட முன்னோர்களின் சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் வழங்க முடியும் என அதிகாரிகள் தட்டிக் கழிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் வேதனை அடைந்த கல்லூரி மாணவன் மகேந்திரா விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவாயிலில் தனிநபராக அமர்ந்து ஜாதி சான்றிதழ் கிடைக்கும் வரை இங்கேயே இருக்கப் போவதாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் துறையினர் கல்லூரி மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவ்வழியே சென்ற எஸ்பி அலுவலகத்தில் சைபர் கிரைம் ஆய்வாளர் தர்ணாவில் ஈடுபட்ட மாணவனை தகாத வார்த்தைகளால் திட்டி இழுத்து அவனை தாடையில் அறைந்து அடித்து அழைத்துச் சென்றார்.
இந்த சம்பவம் அங்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த காவல்துறை மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன் மேலும் பேசுகையில் கடந்த 15 நாட்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் காலை முதல் இரவு வரை அங்கேயே காத்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் எங்களை நாயை விட கேவலமாக அதிகாரிகள் நடத்தியதாகவும் வேதனை தெரிவித்தார்.
கடந்த 15 நாட்களாக ஜாதி சான்றிதழ் கொடுக்க முடியாமல் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ஒருவர் தன்னை அடித்து இழுத்துச் சென்றதாகவும் கண்ணீருடன் வேதனை தெரிவித்தார்.
இந்த நிலியல் மாணவரை தாக்கிய காவல் ஆய்வாளர் கணபதி தற்காலிக பணிநீக்கம் செய்து டிஐஜி பாண்டியன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.