ராஜேந்திர பாலாஜி வழக்கு : முன்னாள் அமைச்சரின் உதவியாளர்களிடம் ரகசிய விசாரணை : 3 நாள் விசாரணைக்குப் பின் விடுவிப்பு
விருதுநகர்: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கின் விசாரணைக்காக விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பழகனின் உதவியாளர்கள் 4 பேர் மூன்று நாட்கள் விசாரணைக்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி வரை மோசடி செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 15 நாள்களாகக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக கூறி தர்மபுரியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் உதவியாளர்கள் பொன்னுவேல், ஏழுமலை, ஆறுமுகம், விக்னேஸ்வரன் ஆகிய 4 பேரை கடந்த டிசம்பர் 28ஆம் தேதி இரவோடு இரவாக காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த மூன்று நாள்கள் தனிப்படையினர் நடத்திய விசாரணை முடிந்து அதிமுக பிரமுகர்கள் நான்கு பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
விசாரணை முடிந்து காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவர்களை முன்னாள் அமைச்சர் இன்பதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். மேலும், ராஜேந்திர பாலாஜியின் வழக்கு குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் தனிப்படை காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.