லத்தியால் தாக்கிய போலீசார்: சுருண்டு விழுந்து இறந்த பெட்டிக்கடைக்காரர்; விழுப்புரத்தில் நடந்தது என்ன?

 


விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகேயுள்ள கடகால் கிராமத்தில் அரசு மதுபான கடையின்  அருகிலேயே பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த   உலகநாதன் (வயது 60) என்பவர் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

மதுபான கடை அருகே கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் அவரது கடை பகுதிக்கு சென்ற பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா ஆகியோர் உலகநாதனை, மதுபான கடையிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் கடை வைக்க வேண்டும் எனவும், மதுக்கடைக்கு அருகிலேயே வைக்கக் கூடாது என கூறியுள்ளனர்.


தான் இந்த பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கடை வைத்திருப்பதாகவும், தற்போது ஏன் கேட்கிறீர்கள் என  உலகநாதன் கேட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் கூறியும் கடையை அப்புறப்படுத்தாததால் ஆத்திரமடைந்த காவலர் ஒருவர், உலகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

மார்பில் காயம் அடைந்த நிலையில் உலகநாதன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உலகநாதனை மீட்ட, அப்பகுதியினர் அவ்வழியாக வந்த ஆட்டோவில் திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் உலகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உலகநாதனை தாக்கிய போலீசாரை கண்டித்து அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் தன் கணவரை போலீசார் அடித்துக் கொன்றதாக அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவரது புகார் மனுவில் இருப்பதாவது:


மதியம் 12 மணி அளவில் எங்களது இடத்தில் வைத்துள்ள பெட்டி கடையில் சுண்டல், போண்டா, வாட்டர் பாட்டில் விற்று எனது கணவர் உலகநாதன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மேற்படி வியாபாரத்தில் சுமார் 3 மணி அளவில் ஜீப்பில் வந்த அரகண்டநல்லூர் காவலர்கள் 4 பேர் எங்களது கடையில் ஜீப்பை நிறுத்தி வியாபாரம் செய்ய வேண்டாம் என கூறினார்கள். அப்போது வியாபாரம் நடந்து கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த காவலர்கள் கடையில் இருந்த பொருட்களை சூறையாடினார்கள். மேலும் என்னை அடிக்க அவர்களது கையில் இருந்த லத்தியை ஓங்கினார். அப்போது எனது அருகில் இருந்த எனது கணவர் காவலர்களை பார்த்து எனது மனைவியை அடிக்க வேண்டாம் என தடுக்க முற்பட்ட போது எனது கணவரை அருகில் இருந்த வேறு ஒரு காவலர் அவரது கையில் இருந்த லத்தியால் ஓங்கி மார்புப்பகுதியில் குத்தினார், அப்போது எனது கணவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து நான் அப்போது கூச்சலிட்டதால் அருகில் இருந்த எனது மகள் கிருஷ்ணவேணி எனது மகன் ராமு மருமகள் மகாலட்சுமி ஆகியோர் ஓடிவந்து எனது கணவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவருக்கு தண்ணீர் இறங்கவில்லை உடனடியாக அவ்வழியாக வந்த ஆட்டோவை பயன்படுத்தி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் எனது கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். மேலும் இது குறித்து விசாரணை செய்து கணவரின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி புகாரில் கேட்டிருந்தார்.


போலீசார் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் இறந்த சம்பவம், மீண்டும் ஒரு சாத்தன்குளம் சம்பவத்தை நினைவூட்டுகிறது. 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)