முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார்
சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தரப்பட்டிருக்கிறது. விருதுநகர் எஸ்.பி.க்கு வந்த புகாரில் முகாந்திரம் உள்ளாதா என காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 17ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.
விருதுநகரில் நடைபெற்ற அதிமுக-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் அவர் மாறிமாறி சென்றுள்ளதாக கூறி, அவரை பிடிக்க 8 தனிப்படைகள் காவல்துறை தரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்லேறு பகுதிகளில் அவரைத் தேடிவருகின்றனர். தற்போது அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸூம் வழங்கப்பட்டுள்ளது.