‘கிணத்த காணோம்’ ஸ்டைலில் நூதன நகைமோசடி : அடமான ரசீதுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மகளிர் சுய உதவி குழு

 


தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், தமிழக அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5 சவரனுக்கு தங்க நகை கடன் பெற விண்ணப்பித்துள்ளனர். அப்போது பதவியில் இருந்தவர்கள் கூட்டுறவு வங்கியில் பணம் கையிருப்பு இல்லை. எனவே நகையை அடமானம் வைத்து விட்டு செல்லுங்கள். பிறகு வங்கிக்கு பணம் வந்ததும் அனைவரின் கைகளிலும் கடனுக்கான தொகை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதை நம்பி வில்லிசேரி பகுதி மகளிர் சுய உதவி பெண்கள் அனைவரும் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு நகை கடனுக்கான பணம் பெறாமலேயே நகையை வங்கியில் அடமானம் வைத்துள்ளனர். அதன் பிறகு பணம் கேட்டு சென்றபோது, அனைவரது வங்கி கணக்கிலும் பணம் வரவுவைக்கப்படும் என அதிகாரிகள் சமாளித்ததாக தெரிகிறது. இந்நிலையில் தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கான நகைக்கடனை தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து, சுய உதவி குழு பெண்கள் வங்கிக்கு சென்று நகையை மீட்க சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் நகைக்கடனுக்கான தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்துமாறு பதில் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்தே தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து நகைமோசடி தொடர்பாக நகை அடமான ரசீதுடன் புகார் மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நகை கடனுக்கு பணம் பெறாமலேயே நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்துள்ளோம். தற்போது நாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து நகையை திரும்ப கேட்கச் செல்கையில் வட்டியுடன் அசலை திரும்ப செலுத்தினால் மட்டுமே நகை தரப்படும் என மிரட்டுகின்றனர்.

நாங்கள் இதுவரை நகைத் கடனுக்கான பணத்தையும் வாங்கவில்லை. அடமானம் கொடுத்த நகையும் கண்ணில் பார்க்கவில்லை. இந்நிலையில் வீட்டு தேவைக்காக நாங்கள் தனியார் ஒருவரிடம் கடன் வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்பொழுது கூட்டுறவு வங்கியிலிருந்து நகை கடனுக்கான வட்டி கட்ட சொல்லி மிரட்டும் நிலையில், தனியாரிடம் வாங்கிய கடனுக்காகவும் வட்டி கட்டி வருகிறோம். எனவே நெருக்கடியான இந்தச் சூழலை மாவட்ட நிர்வாகம் தான் நிவர்த்தி செய்து தரவேண்டும். மேலும் கூட்டுறவு வங்கியில் அடமானத்தில் உள்ள எங்களது நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)