“நீங்கதான் கடவுள்”: மலை கிராம மக்களிடையே உணர்ச்சி பொங்க பேசிய லெப்.ஜெனரல் அருண்: இலவச சிகிச்சை அறிவிப்பு!

 


குன்னூர் ஹெலிகாப்படர் விபத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவிய கிராம மக்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழை சென்னை - தக்ஷிண் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் வழங்கினார்.

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியை சென்னை - தக்ஷிண் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி முற்பகல் 12.30 மணியளவில் கோவையிலிருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணம் செய்த இராணுவ ஹெலிகாப்டர் கடுமையான மேகமூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

அப்போது விபத்தில் சிக்கி தீயில் கருகிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 ராணுவ வீரர்களை மீட்பதற்காக நஞ்சப்பா சத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை மேற்கொண்டனர்.

அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பிற்பகல் நஞ்சப்பா சத்திரம் பகுதிக்கு நேரில் சென்ற சென்னை - தக்ஷிண் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண், ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய நஞ்சப்பா சத்திரம் பகுதி மக்களுக்கு இரு கைகளை வணங்கி தனது நன்றியினை தெரிவித்தார்.

பின் நஞ்சப்பா சத்திரம் பகுதி மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் மற்றும் கம்பளி போன்ற உதவிப் பொருட்களை வழங்கிய லெப்.ஜெனரல் அருண் அப்பகுதி மக்களிடையே பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்புப் பணிகளுக்கு உதவிய கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மாதந்தோறும் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் இலவசமாக இராணுவ மருத்துவர்களைக் கொண்டு ஒரு ஆண்டிற்கு மருத்துவ முகாம் நடைபெறும்.” என உறுதியளித்தார்.

முன்னதாக பேட்டியளித்த லெப்.ஜெனரல் அருண், ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு