காவல்துறையினர் துன்புறுத்தியதில் பலியானவரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 


மதுரை காவல் துறையினர் சட்டவிரோதமாக ஆறு நாட்கள் காவலில் வைத்து சித்ரவதை செய்ததால், தனது மகன் சரவணகுமார் இறந்து விட்டதாகவும், அதற்கு காரணமான திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் உதவி ஆய்வாளர் காஞ்சனா தேவி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி புதிய மீனாட்சி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு தாக்கல் செய்த அறிக்கையில், சரவணகுமார் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அவருக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட இரு காவல்துறை அதிகாரிகளும் தாக்கல் செய்த பதில் மனுவில், போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக புகார் வந்ததால் சரவண குமாரை கைது செய்ததாகவும், சிறையில் அடைக்கும் போது அவருடைய காலில் மட்டும் காயம் இருந்ததாகவும், வேறு எந்த காயங்களும் இல்லை என்றும் மாரடைப்பு காரணமாக அவர் இறந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில், சரவணகுமார் ஆறு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து தாக்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை உத்தரவிட்டுள்ளது.