ஃபேஸ்புக் மூலம் பழகி ரூ.34 லட்சம் மோசடி செய்த பெண் கைது

 


சிவகங்கை மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த பாரதிராஜா, திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஆவடியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் மருத்துவர் எனக் கூறி அறிமுகமான ஐஸ்வர்யா, பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பி பாரதிராஜா, தவணை முறையில் 14லட்சம் ரூபாயை ஐஸ்வர்யாவிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே, பாரதிராஜாவின் பெரியப்பா மகன் மகேந்திரனிடமும், 20 லட்சம் ரூபாய், ஒரு தங்க சங்கிலி ஆகியவற்றை ஐஸ்வர்யா வாங்கியதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து பாரதிராஜா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஐஸ்வர்யாவை கைது செய்தனர். 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஐஸ்வர்யா, ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவரது கணவர் வேளாண் துறையில் பணியாற்றி வருவதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.