அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்ட திமுக கொடி கம்பம் விழுந்ததில் 10 வயது சிறுமிக்கு மூக்கு உடைந்தது
சேலத்தில் அமைச்சரை வரவேற்க சாலையோரத்தில் திமுக கொடி கம்பங்களை நடும் போது 10 வயது பள்ளி மாணவியின் மீது கொடி கம்பம் பட்டு மூக்கு தண்டு உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி அரசு நிகழ்ச்சிக்காக சேலம் வருவதை முன்னிட்டு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதனிடையே சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திப்பதற்கு வரும் அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டு வந்தன. அப்போது தாதகாப்பட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மனைவி விஜயா தன்னுடைய குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது திமுகவினரால் நடப்பட்டு வந்த கொடிக்கம்பம் மோதி மாணவியின் மூக்கு தண்டு உடைந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக சார்பில் நஷ்ட ஈடாக கட்சி நிர்வாகிகள் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.