மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: ஆசிரியர் மற்றும் ஆண் நண்பர் வீட்டில் போலீசார் சோதனையில் கிடைத்த ஆவணங்கள்..!!
கோவை: கோவையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனிப்படை போலீசார் 4 இடங்களில் என்று சோதனை மேற்கொண்டு செல்போன் லேப்டாப் ஆகியவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆசிரியரல் பாலியல் தொல்லை செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்தும், மாணவியின் நண்பரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று தனிப்படை போலீசார் மாணவி வீடு, பள்ளி முதல்வர் அறை, ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி வீடு , மாணவியின் நண்பர் வீடு ஆகிய 4 இடங்களில் சோதனை நடத்தினர்.இதில் 2 செல்போன், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் தடயவியல் சோதனைக்கும், உண்மைத்தன்மையை அறியும் சோதனைக்கும் அனுப்பப்பட உள்ளன.ஏற்கனவே, மாணவி மரணத்தில் பல்வேறு குழப்பங்களை சிலர் அவிழ்த்துவிட்டிருக்கும் சூழலில், இன்று மாணவியின் நண்பர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.