ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டவர் படுகொலை; திமுக ஒன்றிய செயலாளர், தொழிலதிபர் மீது வழக்கு பதிவு

 


திருச்சி மாவட்டம் ராஜிவ் காந்தி நகரில் உள்ள செங்கதிர்சோலை மயானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பொன்று செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் என்று சிலரை பட்டியலிட்டு, அவர்கள் தொடர்பாக காவல்துறையிடம் மல்லியம்பத்து ஊராட்சித் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் புகார் தெரிவித்துள்ளனர். 

இந்த சிவக்குமார், திருச்சி செங்கதிர்சோலையோரை சேர்ந்தவர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ்வரன் மற்றும் சிவக்குமார் இருவரும் புகார் அளித்ததன் காரணமாக, அவர்கள்மீது ஆத்திரம் கொண்ட ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபர்கள், கடந்த சில தினங்களாக சிவக்குமாரிடம் பிரச்னை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நேற்று இரவு சிவா வீட்டிற்கு சென்று, சிவாவை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து சிவாவின் மனைவி மைதிலி புகார் அளித்திருந்திருக்கிறார். அதன் அடிப்படையில் முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் - வாசன் எஸ்டேட் தொழில் அதிபருமான ரவி முருகையா, திமுக ஒன்றியச் செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல் மற்றும் பிரபாகரன், தீபக் ஆகிய 4 பேர் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாடக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே போல் ரியல் எஸ்டேட் பிரச்சனையில் ஒரு கொலை நடந்து உள்ளது. அதிலும் இவர்களுக்கு எதுவும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.