நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் : அர்ஜூன் சம்பத் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு

 


கோவை: நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ.1001 பரிசாக வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் சமாதனம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அந்த நபர் விஜய் சேதுபதி இந்தியாவை விமர்சித்ததாகவும், முத்துராமலிங்க தேவரை விமர்சித்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், “தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதை = ரூ.1001/- ” என்று தெரிவித்திருந்தார்.


அர்ஜூன் சம்பத்தின் இந்த பதிவு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள அர்ஜூன் சம்பத் இவ்வாறு பேசி வருவதாகவும், அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று கருத்துக்கள் வெளிவந்தன. இதனிடையே கோவை மாநகர காவல்துறையினர் அர்ஜூன் சம்பத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை கடை வீதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிரிவு 504 – வன்முறையை தூண்டும் விதமாக பேசுதல், பிரிவு 506 (1) மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு பிரிவுகளிலும் தலா இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.