இரவு சினிமா பார்த்துவிட்டு வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை; காவலர் கைது

 


மதுரையைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், தனியார் நிறுவன உரிமையாளர் மகேஷ்குமார் என்பவருடன் இரவு சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாநகர் திலகர் திடல் குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் முருகன், இருவரையும் மடக்கி மகேஷ்குமாரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்ததுடன், பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.

இதில் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன உரிமையாளர் மகேஷ்குமார், திலகர் திடல் காவல்துறையிடம் இன்று மதியம் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.

மேலும், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் மதுரை மாநகர் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில், சம்பவம் நடந்தது உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல்நிலை காவலர் முருகன் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தல், வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மதுரை மாநகர் அனைத்து மகளிர் தெற்கு காவல் துறையினர் முருகனை கைது செய்துள்ளனர்.