கந்துவட்டி கொடுமை ...குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதிக்க கோரி கோட்டாட்சியர் காலில் விழுந்து கதறி அழுத பெண்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுப்புராஜ் தற்பொழுது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பாக சுப்புராஜ் சென்னையில் டிரைவராக வேலை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்த சுப்புராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கான மருத்துவ செலவிற்காக கடம்பூரைச் சேர்ந்த முருகேசபாண்டியன் என்பவரிடம் ரூ. 4 லட்சத்து 20 ஆயிரத்தை 10பைசா வார வட்டிக்கு வாங்கியுள்ளார். தொடர்ந்து வட்டி கொடுக்க முடியவில்லை என்பதால் வேறு சில நபர்களிடம் இருந்து சுப்புராஜ் மற்றும் வனிதா ஆகியோர் கடன் வாங்கியுள்ளனர்.
மேலும் உள்ளுரில் சரியான வேலை கிடைக்கவில்லை, வட்டி வேறு கட்ட வேண்டும் என்பதால் சுப்புராஜ் கடன் வாங்கி சவுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சொன்னபடி ஊதியம் கொடுக்கமால் குறைவான ஊதியம் கொடுத்த காரணத்தினால் வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு வனிதா குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
வேறு வழியில்லமால் வட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக மேலும் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் கோவில்பட்டி காமராஜ் நகரை சேர்;ந்த ரேவதி, சீனிவெள்ளபுரம் கிருஷ்ணசாமி, கோவில்பட்டி பாலஜி நகர் ஆனந்தராஜ், பாண்டவர்மங்கலம் வேல்முருகன், ஆகியோரிடம் பணம் வாங்கியுள்ளார். அனைவருமே 10 பைசா வட்டியில் பணம் கொடுத்துள்ளனர்.
ரூ. 4 லட்சம் வட்டி கொடுக்க மற்றவர்களிடம் பணம் வாங்கி தற்பொழுது 20 லட்ச ரூபாய் கடனில் வனிதா குடும்பம் தத்தளித்து வருகிறது. இதற்கிடையில் வனிதா குடும்பத்திற்கு பணம் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதில் பலரும் வனிதா வீட்டில் அமர்ந்து கொண்டு அவர்களை வெளியே போக விடமால் தொடர்ந்து மிரட்டி வந்த காரணத்தினால் வெறு வழியில்லால் வேறு நபர்களிடம் வட்டிக்கு வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வனிதாவிற்கு கோவில்பட்டி கருமாரியம்மன் கோவிலை சேர்ந்த ஆசிரியை புஷ்பா என்பவர் 1 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை, 10 பைசா வார வட்டிக்கு கொடுத்துள்ளார். வனிதாவும் தற்பொழுது வரை அந்த தொகைக்கான வட்டியாக, 2 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால் அசல் வட்டி என 6 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று ஆசிரியை புஷ்பா மற்றும் அவரது கணவர் சாந்தராம் என்ற ராமமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து வனிதாவை மிரட்டி வருவது மட்டுமின்றி, ஆபசமாகவும் பேச தொடங்கியுள்ளனர்.
இதனால் மனமுடைந்து போன வனிதா, அவரது இருமகன்கள் மற்றும் அவரது அத்தை யசோதா ஆகியோருடன் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரணயனிடம் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர கோரி மனு அளித்தது மட்டுமின்றி, திடீரென வனிதா கோட்டாட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையெடுத்து கோட்டாட்சியர் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.