உ.பியில் போலீஸ் நிலையத்தில் முஸ்லீம் இளைஞர் மரணமடைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 


உபி மாநிலம் கஸ்கஞ்ச் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர் திடீரென மரணமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் தனது சட்டையின் கயிற்றைக் கொண்டு கழிப்பறைக்குப் போய் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போய் விட்டதாக போலீஸார் கூறியிருப்பது மேலும் சர்ச்சையாகியுள்ளது.

மரணமடைந்த நபரின் பெயர் அல்தாப். 30 வயதாகும் அவர் கஸ்கஞ்ச் அருகே உள்ள அஹிராலி என்ற கிராமத்தசை் சேர்ந்தவர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், இவரும் காதலித்து வந்தனர். இருவரும் வீட்டை விட்டு போய் விட்டனர். இந்த நிலையில், பெண் வீட்டு தரப்பில் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் அல்தாபை கண்டுபிடித்த போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு சென்றனர்.


ஆனால் போலீஸ் காவலில் இருந்த அல்தாப் திடீரென மரணமடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் அல்தாபின் தந்தை சஹத் மியா அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையம் விரைந்தார். தனது மகனை போலீஸார் அடித்துக் கொன்று விட்டதாக தற்போது சஹத் மியா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சஹத் மியா கூறுகையில், எனது மகனை போலீஸார் அடித்தே கொன்று விட்டனர். திங்கள்கிழமை எனது மகனை போலீஸார் அழைத்துச் சென்றனர். விசாரணை நியாயமாக நடக்கட்டும் என்று நானும் ஒத்துழைத்தேன். ஆனால் நேற்று எனது மகனைப் பார்க்கப் போனபோது போலீஸார் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. தற்போது அவன் இறந்து விட்டதாக போலீஸார் கூறுகின்றனர். எங்களுக்கு நியாயம் வேண்டும் என்றார் மியா.

இதுதொடர்பாக தற்போது போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். மாவட்ட எஸ்பி ரோஹன் போத்ரே இதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அல்தாப், தனது சட்டையின் கயிற்றை எடுத்து கழிப்பறையில் வைத்து தூக்குப் போட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அல்தாப் மீது கடத்தல் மற்றும் பெண்ணை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் அவரை விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

விசாரணையின்போது கழிப்பறைக்குப் போக வேண்டும் என்று அல்தாப் கேட்டுள்ளார். போலீஸார் அவரை லாக்கப்புக்குள் உள்ள கழிப்பறைக்குள் செல்ல அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் திரும்ப வரவில்லை. இதையடுத்து உள்ளே போய்ப் பார்த்தபோது அவர் தனது சட்டை கயிற்றை தனது கழுத்தில் இறுக்கி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அங்கிருந்த பைப்பில் கயிற்றைக் கட்டி தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கஸ்கஞ்ச் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு ஏட்டு, போலீஸ்காரர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்