‘குற்றாலம் என்ன குற்றவாளியா?…அருவியில் குளித்து போராட்டம்’: திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சி.ஐ.டி.யு…போஸ்டரால் சர்ச்சை..!!

 


தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்கும் நூதன போராட்டத்தை அறிவித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஆளும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் மற்ற சுற்றுலாதலங்களை போல் குற்றாலத்திற்கு கொரோனா தளர்வுகளில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், குற்றாலம் மட்டும் குற்றவாளியா? குளிக்க தடை ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகள் அச்சிடப்பட்டுள்ளன.

இதனிடையே திமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ள போதும் அந்தக் கட்சிகளின் தொழிற்சங்கம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் உள்ளூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரில், தனியார் அருவிகளின் முதலாளிகள் மீது அரசுக்கு தனிப்பாசமா என கேள்வி எழுப்பியுள்ளதுடன் வரும் 9ம் தேதி ஆர்ப்பரிக்கும் அருவியில் சங்கமிப்போம், அனைவரும் வாரீர் என அழைப்பு விடுத்துள்ளனர்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகாலம் ஆவதால் சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற சுற்றுலா தலங்கள் அனைத்தும் கொரோனா கால கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் வருகைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்படுவதன் பின்னணியில் தனியார் அருவிகளின் முதலாளிகள் சிலர் இருப்பதாக சி.ஐ.டி.யு. சந்தேகம் கிளப்பியிருப்பது கவனிக்கத்தக்கது. மாவட்ட நிர்வாகம் காவலர்களை ஷிப்ட் முறையில் பணியமர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினாலும் கூட, மது அருந்திய நிலையில் அங்கு வரும் இளசுகள் பலர், தடையை மீறி தாங்கள் குளிப்போம் என மல்லுக்கு நிற்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

இதனால் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறை அதிகாரிகளும், இதனை கவனத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிஐடியு தொழிற்சங்கம் முன்வைத்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)