`BH' வாகனப் பதிவு பெற்ற வாகனங்கள்.. BH வாகனப் பதிவு என்றால் என்ன?
காரையோ டூ வீலரையோ ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. தான் பதிவு செய்திருக்கும் மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு என்.ஓ.சி வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. மேலும் புதிதாக மற்றொரு மாநிலத்தின் சாலை வரிகளைச் செலுத்த வேண்டிய சிக்கலும் இதில் உண்டு.
இவ்வாறான சிக்கல்களில் இருந்து தப்பிக்க, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் பாரத் சீரிஸ் என்ற பெயரில் `BH' என்ற வாகனப் பதிவின் மூலம் நாடு முழுவதும் வாகனத்தைப் பயன்படுத்தும் வசதி அளிக்கப்படும்.
பாதுகாப்பு, இரயில்வே போன்ற மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் நாடு முழுவதும் பணிமாற்றம் பெற்றாலும் பொருந்தும் என அந்தத் தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த அறிவிப்பு.
தற்போது வாகனத்தை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புபவர் முதலில் தான் இருக்கும் மாநிலத்தில் வாகனத்தை எடுத்துச் செல்வதற்கான என்.ஓ.சி சான்றிதழைப் பெற வேண்டும். இது மற்றொரு மாநிலத்திற்கான புதிய பதிவையும் மேற்கொள்ளும்.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, புதிய மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனங்களைப் புதிய மாநிலத்தில் மறுபதிவு செய்ய 12 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் சாலை வரி கட்டுவதற்கும் கால அவகாசம் உண்டு. வாகன வரி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு பரிமாற்றம் செய்யப்படும். தற்போது இதனை மாற்ற புதிய பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அலுவலக காத்திருப்பு என அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் முறையின்றி, முழுவதுமாக ஆன்லைனில் புதிய வாகனத்திற்கான BH சீரிஸ் பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பதிவு முறை கடந்த செப்டம்பர் 15 அன்று அமல்படுத்தப்பட்டது. `பிஎச்’ பதிவைக் கொண்ட வாகனங்கள் புதிய மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இந்த வழிமுறை மத்திய,மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இந்த பதிவு எண் கிடைக்கும். நான்கு மாநிலங்களுக்கும் மேல் கிளைகள் வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரும் இந்தப் பதிவு எண்ணைப் பெறலாம்.
`பிஎச்’ நம்பர் என்றால் எப்படி இருக்கும்?
பிஎச் என்ற புதிய வாகனப் பதிவு எண் `22 BH XXXX AA' என்ற எண்ணைப் போன்றவாறு அளிக்கப்படும். இதில் முதல் இரண்டு இலக்கங்கள் வாகனப் பதிவு செய்யப்பட்ட ஆண்டும், நடுவில் உள்ள நான்கு இலக்கங்கள் வரிசையின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எண்களாகவும், இறுதி இரண்டு இலக்கங்கள் ஆங்கில எழுத்துகளாகவும் அளிக்கப்படும்.