“கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தலைமை காவலர்.. 6 பேர் கைது” : கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயகன்பட்டி லட்சுமி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கணேசன்(80). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான கணேசனின் மனைவி கனகம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விடவே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில். கடந்த 26ம் தேதி அன்று கணேசன் வீட்டிற்கு காரில் வந்த மர்மநபர்கள் கணேசனின் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ரூ 4,00,000 பணம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு காரில் தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் பார்த்திபன், காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று காந்திநகர் அருகே கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார் போன்று தோற்றம் உடைய காரில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தவர்களிடம் தனிப்படை போலிஸார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கோபிகண்ணன், ராஜபாளையத்தை சேர்ந்த சம்பத்குமார், திருமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வர்மா, அஜய்சரவணன், மதுரையை சேர்ந்த அலெக்ஸ்குமார், மூர்த்தி ஆகிய 6 பேரை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ88,000 பணம், 2சவரன் தங்கநகை, கத்தி மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலிஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கொள்ளைக்கு நகர் காவல்நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் இளங்குமரன் திட்டம் தீட்டி கொடுத்து மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட தகவலறிந்து இளங்குமரன் தலைமறைவானார். தலைமை காவலர் இளங்குமரனை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். தலைமைக் காவலர் ஒருவர் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.