தளர்த்தப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும்: ராதாகிருஷ்ணன்

 


தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு நடப்பாண்டு 150 மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் 11 புதிய மருத்துவகல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்து 2 ஆயிரத்து 145 கோடி வழங்கியது. மாநில அரசு ஆயிரத்து 850.32 கோடி வழங்கியது. இதில் பணிகள் விரைந்து நடைபெற்று நடப்பாண்டு நீலகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகரில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மிகக்குறுகிய காலத்தில் மருத்துவ கல்லூரியை தயார் செய்து தேசிய மருத்துவ குழுமத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு 450 கூடுதல் சீட் பெற்றது பாராட்டுக்கு உரியது. மீதமுள்ள கல்லூரிகளுக்கு ஒப்புதல் பெற போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

“தமிழகத்தில் 65 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், முதியவர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மீண்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 4 சதவீத பேருக்கு மட்டுமே இறப்புக்கான சாத்திக்கூறு உள்ளது. கொரோனாவிலிருந்து நம்மை காக்க விழிப்புணர்வு மட்டும் போதாது. நமது பழக்க வழக்கங்களிலும் மாற்றம் வேண்டும்.

பண்டிகை காலங்களிலும், போக்குவரத்திலும், குழுவாக செயல்படும் இடங்களிலும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும்” என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்