ஊசி மாத்திரையில் கருக்கலைப்பு... ரத்தபோக்கில் பெண் பலி... தனியார் மருத்துவமனை அடித்து உடைப்பு!

 


சின்னசேலம் அருகே பாண்டியன் குப்பம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி சந்திரலேகா(29). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கர்ப்பம் அடைந்த சந்திரலேகா சின்ன சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில்  கருக்கலைப்பு ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவரது வயிற்றில் இருந்த கருவை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது.

இதையடுத்து ரத்தப் போக்கு நிற்காமல் தொடர்ந்து வெளியேறியதால் சந்திரலேகாவை மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் உடல் நிலை மோசமானதை அடுத்து ஏற்கனவே சிகிச்சை அளித்த சின்ன சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தனர்.


அப்போது ஆத்திரம் அடைந்த சந்திரலேகாவின் உறவினர்கள் ஆம்புலன்சை நடுரோட்டில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டதோடு சிலர் ஆஸ்பத்திரி வளாகத்தில் புகுந்து கண்ணாடி கதவுகளை உடைத்து சூறையாடினர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ததோடு சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியை மூடி சீல் வைத்தனர்.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்திரலேகாவை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அவரது கணவர் பெருமாள், சின்னசேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் தவறான கருக்கலைப்பு சிகிச்சை அளித்ததுதான் தனது மனைவி இறப்புக்கு காரணம் என கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு சின்ன சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை ஆய்வு செய்து அறிக்கை தர கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சின்ன சேலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் சின்னசேலம் தனியர் மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டு கருக்கலைப்பு சிகிச்சை அளிக்க அரசு அனுமதி இல்லாமல் மேற்படி தனியார் ஆஸ்பத்திரி இயங்கி வந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)