உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படு தோல்விக்கான காரணங்கள் என்ன? – விரிவான அலசல்

 


சில மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, தற்போது நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் காரணங்கள் என்ன?

திமுகவுக்கு இமாலய வெற்றி - அதிமுகவுக்கு கடும் பின்னடைவு:

இரண்டு கட்டங்களாக நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது, அதன் முடிவுகள் கிட்டதட்ட வெளியாகிவிட்டன. சில இடங்களுக்கு மட்டும் முடிவுகள் வந்துக் கொண்டிருக்கின்றன, இதில் பெரும்பாலான மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

மொத்தமுள்ள 140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில், திமுக கூட்டணி 138 இடங்களிலும், அதிமுக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் இடங்களில் திமுக கூட்டணி 1009 இடங்களிலும், அதிமுக கூட்டணி 215 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாமக 47 இடத்திலும், அமமுக 5 இடத்திலும், தேமுதிக ஒரு இடத்திலும், சுயேச்சை உள்ளிட்ட பிற கட்சிகள் 95 இடங்களிலும் வெற்றிபெற்றும், முன்னிலையிலும் உள்ளன.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக- 928, காங்கிரஸ் – 32, மதிமுக- 15, விசிக- 15, சிபிஐ – 2, சிஐஎம் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் அதிமுக - 204, பாஜக – 8 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாகா மற்றும் சில கட்சிகளும் கூட்டணியில் இருந்தன. ஆனால் இந்த முறை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பாமக அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்கள், இவற்றில் பாமகவுக்கு செல்வாக்கு உண்டு என்பதால் இதுவும் அதிமுகவுக்கு பாதகமாகியிருக்கிறது.

இரட்டை தலைமை, சசிகலா, பாஜக, பாமக - அதிமுக தோல்வியின் காரணங்கள்:

அதிமுக சந்தித்துள்ள தோல்வி குறித்து பேசிய பத்திரிகையாளர் ப்ரியன், “ பாராளுமன்ற தேர்தலில் தொடங்கிய அதிமுகவின் தோல்வி, இப்போதுவரை நீண்டுகொண்டே வருகிறது. மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர்களில் 2 இடங்களில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. அதிமுகவின் இந்த படுதோல்விக்கு பல காரணங்கள் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வடமாவட்டங்களில் பாமகவை நம்பியே அதிமுக களம் இறங்கியது, ஆனால் அப்போதே அது கைகொடுக்கவில்லை, இருந்தாலும் அந்த மாவட்டங்களில் திமுகவுக்கு அதிமுக – பாமக கூட்டணி கடும் போட்டியை கொடுத்தது. ஆனால் தற்போது  7 வட மாவட்டங்களில் நடந்த தேர்தலில் 47 ஒன்றிய கவுன்சிலர்களை பாமக வென்றுள்ளது, இது அதிமுகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசியில் அமமுக சில இடங்களில் வென்றதுடன் கணிசமான வாக்குகளையும் பிரித்துள்ளது, இதுவும் அதிமுகவுக்கு பின்னடைவுதான். முக்கியமாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது தொடர்ந்து அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு காரணமாக பாஜக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர், அந்த கோபம் அதிமுக  மீது திரும்புகிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகள், அதிமுக எதிர்ப்பு வாக்குகள், பாமக எதிர்ப்பு வாக்குகள் என எல்லா தரப்பு வாக்குகளும் திமுகவுக்கு செல்வதுதான் அவர்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.

திமுக இந்த தேர்தலில் மக்களை அனைத்து வகையிலும் கவனித்து நல்ல சுறுசுறுப்பாக வேலை செய்தனர். ஆனால் அதிமுகவினர் சுத்தமாக வேலை செய்யவே இல்லை, ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்கள் அதிமுக வேட்பாளர்களை கவனிக்கவே இல்லை.

இதையெல்லாம் விட அதிமுகவின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம், அதிமுகவின் இரட்டை தலைமைக்கிடையே நிலவும் குழப்பம், தொண்டர்களையும், மக்களையும் குழப்பியுள்ளது. மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியின் ஈகோ காரணமாக சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இணைக்க மறுக்கிறார். இதுபோன்ற பல பலவீனங்களால் அதிமுகவை நம்பி வாக்களிக்க மக்கள் தயங்குகிறார்கள்.  

தற்போது தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்கிறார்கள், ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டாக் சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் கடந்த 2019 அதிமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுகவுக்கு சமமாக வெற்றிபெற்றது எப்படி?

அதிமுகவின் செல்வாக்கு இப்போது சுத்தமாக சரிந்துவிட்டது இதுதான் தோல்விக்கான உணமையான காரணம். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை சசிகலா, தினகரன் போன்றோரை இணைத்து கட்சியை வலிமையாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சசிகலா வந்தால் தன் பதவிக்கு ஆபத்து என இபிஎஸ் நினைக்கிறார். இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் தனது சுயநலத்தை பார்க்கிறார்களே தவிர கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து கொண்டே செல்வதை கவனிக்கவே இல்லை. சசிகலா வந்தால் பெரிய மாற்றம் வரும் என சொல்லவில்லை, ஆனால் கட்சி ஒற்றுமையாக இருந்தால் தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள், மக்களும் கட்சியை நம்புவார்கள். அதிமுக கிராமப்புறங்களில் வலுவாக உள்ள கட்சி, அப்படி இருக்கையில் ஊரகப்பகுதியிலேயே படுதோல்வியை சந்திக்கிறது என்றால், வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்னும் மோசமாக தோற்கும்” என்கிறார் தீர்க்கமாக.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)